
ஜனாதிபதிக்கு சிறப்பு விருந்துபசாரம்!
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது. ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக்கின் ஏற்பாட்டில் காலை விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருநாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளுடன் செயற்பட எதிர்பார்ப்பதாக ஜப்பான் – இலங்கைப் பாராளுமன்ற லீகின் தலைவர் யொசிதாகா சின்டோ (Yoshitaka Shindo) மற்றும் பொதுச் செயலாளர் யுகோ ஒபுசி (Yuko Obuchi) ஆகியோர் இங்கு தெரிவித்தனர்.
இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்காக அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தாங்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக், முன்னாள் ஜப்பானிய பிரதமர் கெய்சோ ஒபுசி(Keizo Obuchi) தலைமையில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான்-இலங்கை பாராளுமன்ற லீக்கின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.