கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் 'கல்கி 2898 AD
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் 'உலகநாயகன்' கமல்ஹாசன் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில், 'உலகநாயகன்' கமல்ஹாசன் இடம்பெறாதது அவரது ரசிகர்களையும், தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கமல்ஹாசன் நடித்திருக்கும் ஒரு திரைப்படத்தில் அவருடைய புகைப்படம் இல்லாமல் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பது இது முதன்முறை என திரையுலக வணிகர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன் படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு திரையுலகினர் என்பதாலும் அவர்கள் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாலும் கமல்ஹாசனின் புகைப்படம் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், ரெபல் ஸ்டார் பிரபாஸ், பொலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவியல் புனைவு கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
புராணங்களை தழுவி எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு கதையாக உருவாகி இருக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இவர் தோன்றும் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே படத்தின் வெளியீட்டு திகதியுடன் வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகிய மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கமல்ஹாசனுக்கு போஸ்டரில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது தமிழ் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் அவமதிக்கும் செயல் என திரையுலக வணிகர்கள் காத்திரமாக விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.