
கதாநாயகன் மீது நடிகை இஷா கோபிகர் மீ டூ புகார்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஏற்கனவே புகார்கள் கிளம்பின. மீ டூவிலும் பாலியல் தொல்லை அனுபவங்களை நடிகைகள் பகிர்ந்து வருகிறார்கள். பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர் ஏற்கனவே தனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் தன்னை படுக்கைக்கு அழைத்த கதாநாயகன் பற்றி பேசி உள்ளார். இவர் தமிழில் ஜோடி, என் சுவாச காற்றே, காதல் கவிதை, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ளார்.
இஷா கோபிகர் அளித்துள்ள பேட்டியில், “பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. ஒரு முறை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கதாநாயகன் பெயரை சொல்லி அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்றார். அந்த கதாநாயகனுக்கு போன் செய்தேன். அவர் என்னை யாரும் இல்லாமல் தனியாக வந்து சந்திக்க சொன்னார். அவரது நோக்கம் புரிந்தது. சந்திக்க மறுத்து விட்டேன். தயாரிப்பாளரிடம் நடிக்க வந்து இருக்கிறேன். வேறு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்றேன். உடனே என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்படி நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்’’ என்றார்.
படுக்கைக்கு அழைத்த நடிகர் பெயரை அவர் வெளியிடவில்லை.