கிரீசில் காட்டுத் தீ: கட்டுப்படுத்த தவறியதற்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்

11.08.2021 15:07:27

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ கிரீஸ் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


காட்டுத் தீ காரணமாகப் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ, மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து உள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


இந்நிலையில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் கூறுகையில், 'நாட்டு மக்களின் வலியை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்றேன். தங்களுடைய இடமும், வீடும் நெருப்புக்கு இரையாவதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம். ஆனால் அது போதவில்லை. தோல்விகள் கண்டறிந்து விரைவில் சரிசெய்யப்படும். காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டு உள்ளது' என்றார்.