லக்னோவில் நடைபெற்ற ஐடிஐ பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம் என்ற தமது வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டதால் தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெக்காலே கல்வி முறை மூலம் நமது பாரம்பரிய திறன்கள் சிதைக்கப்பட்டு, காகித வேலை செய்யும் கிளர்க்குகள் உருவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஐஐடி மாணவர்களுக்கு இணையான மரியாதை ஐடிஐ மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், பெரிய நிறுவனங்களை இயக்க பேப்பர் டிகிரிகளை விட நூற்றுக்கணக்கான ஐடிஐ பட்டதாரிகளே தேவைப்படுகிறார்கள் என்றார். 2023-ல் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு தாம் கூறியதை அன்று கேலி செய்தவர்கள், இன்று அதன் பலன்களைப் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காலம் வேகமாக மாறி வருவதால், கோட், பேண்ட், டை அணிந்து சான்றிதழ்களுடன் வலம் வருபவர்களை விட, உண்மையான தொழில் திறன் கொண்டவர்களுக்கே இனி எதிர்காலத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.