ETR.FM

இனவழிப்பு அரசாங்கங்களின் பாதையில் தான் இந்த அரசாங்கமும் பயணிக்கிறது!

28.11.2026 15:07 4 நிமிட வாசிப்பு
இனவழிப்பு அரசாங்கங்களின் பாதையில் தான் இந்த அரசாங்கமும் பயணிக்கிறது!
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து தமிழ் இனவழிப்புக்காக ஆட்சியாளர்கள் பயணித்த பாதையில் தான் இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. ஆயதமேந்தி போராடும் மனநிலையில் தமிழ் மக்கள் தற்போது இல்லை.இருப்பினும் கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற மனநிலையில் எம்மக்கள் உள்ளார்கள். மாகாணசபைத் தேர்தலை நடத்தியாவது எமது மக்களுக்கான அதிகாரங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.   
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற அமர்வில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் கடற்றொழில், கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,மண்ணுக்காகவும், இனத்துக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த சகல வீரர்களுக்கும் இந்த உயரிய சபை ஊடாக அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தலை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் அனுமதி வழங்கியுள்ளது என்று ஒரு தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது.இதனை ஏற்க முடியாது.நல்லாட்சி அரசாங்கத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ,ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கத்தின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் அனுஸ்டானங்கள் இடம்பெற்றன.அத்துடன் ஒருசில பகுதிகளில் கெடுபிடிகளும் இடம்பெற்றன.நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அரசாங்கங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்திய போது அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் தமிழன் என்ற அடிப்படையிலும் அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து எமது நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டுள்ளோம்.இம்முறை மக்களே சுயமாக இந்த நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளார்கள். இதில் அரசியல் இலாபம் தேடுவதை ஏற்க முடியாது.நாங்கள் தான் முன்னின்று செய்கிறோம் என்பதை காட்டுபதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள்.நினைவேந்தலின் போது கார்த்திகை பூவை கொண்டு எமது உறவுகள் அனுஸ்டிக்கிறார்கள்.இந்த பூ கார்த்திகை மாதத்திலேயே பூக்கும். இந்த பூவை வைத்து அனுஸ்டிப்பதற்கு பொலிஸார் தடையேற்படுத்துகிறார்கள். இடையூறு விளைவிக்கிறார்கள். அவ்வாறாயின் கார்த்திகை மாதத்தில் பூக்கும் சகல பூக்களையும் தடை செய்ய வேண்டும்.அதேபோல் தமிழ் ஈழத்தின் தேசிய பறவையாக அடையாளப்படுத்தப்பட்ட செம்பக பறவையை கண்டால் சுட்டுத்தள்ளுங்கள்.இந்த நாட்டில் அந்த பறவை இருக்க கூடாது என்று விரட்டி விடுங்கள்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும்,முன்னேற்றமடைவதற்காகவுமே பலர் போராட்டங்களை செய்தார்கள். மக்கள் விடுதலை முன்னணி வயிற்றுப்பசிக்காகவும், சமத்துவமின்மை என்பதற்காகவும் போராடியதே தவிர இன விடுதலைக்காக போராடியது என்பதற்கான வரலாறு ஏதும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடினார்கள். 1948 முதல் 1970 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் புறக்கணிப்புக்களை பார்த்து,பார்த்து பொருத்துக் கொள்ள முடியாமலே இனத்துக்காக ஆயுதமேந்தி போராடினார்கள்.1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமானது. அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் கல்லோயா திட்டம் உள்ளிட்ட நீர்பாசனத்திட்டங்களை அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் ஆயுதமேந்தினார்கள்.பல்கலைக்கழக உள்ளீர்ப்பின்போது தமிழ் மாணவர்களின் விகிதம் திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதேபோல் தனிச்சிங்கள சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் எமது உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு இனத்துக்காக உயிர்நீத்தார்கள். அவர்களை நினைவுகூர்ந்து தான் இன்று (நேற்று) உணர்வுபூர்வமாக நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.ஆயுத போராட்டம் மௌனித்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்து அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு கூட இந்த அரசாங்கம் தயார் நிலையில் இல்லை. ஆயுதமேந்தி போராடும் மனநிலையில் தமிழ் மக்கள் தற்போது இல்லை. இருப்பினும் கௌரவமான அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் திட்டங்களை இந்த அரசாங்கமும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளது.கிவுல் ஓயா திட்டம்,கீழ் மல்வத்துஓயா திட்டம், மாதுறுஓயா திட்டம் ஆகிய திட்டங்கள் ஊடாக தமிழ் -முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 1948 ஆம் ஆண்டு முதல் இனவழிப்புக்காக அரசாங்கங்கள் சென்ற பாதையில் தான் இந்த அரசாங்கமும் பயணிக்கிறது.இது முற்றிலும் தவறானது என்றார்.
     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்