அசோக் செல்வன் நடிக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்'
கடந்த ஆண்டில் வெளியான 'போர் தொழில்' எனும் படத்தின் வெற்றி மூலம் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'எனக்குத் தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, எம். எஸ். பாஸ்கர், விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை டி கிரியேசன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். திருமலை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் அசோக் செல்வன் காதல் இளவரசனாக தோன்றுகிறார். காதலிப்பதற்காக இவர் கையாளும் உத்திகள் நகைச்சுவையாக இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
'ப்ளூ ஸ்டார்', 'பொன் ஒன்று கண்டேன்' என இந்த ஆண்டிலும் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அசோக் செல்வனுக்கு இந்த திரைப்படமாவது வணிக ரீதியான வெற்றியை வழங்கி அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்துமா..! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.