அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறார். இந்த நிலையில் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா ராயிடம் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, "நிறைய பேர் நீங்கள் ஏன் அதிக படங்களில் நடிப்பது இல்லை என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் முக்கியமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பதால் இந்த கேள்வியை எழுப்புகின்றனர். எனது திறமையை அடையாளம் கண்டு இப்படி கேட்பதை பெரிய விருதுமாதிரி நினைக்கிறேன். சினிமா துறை என்பது தினம் தினம் புதுமைகளோடு இருக்கும் ஒரு உலகம். எது ரசிகர்களுக்கு பிடிக்கும் நல்ல கதை என்று தோன்றுகிறதோ அதில் நடிக்கிறேன். மணிரத்னம் நடிகையாக என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். இதை உன்னால் செய்ய முடியும் சென்று சொல்வார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஒரு மாணவி மாதிரி ஒவ்வொரு வசனத்தையும் எழுதி கற்றுக்கொண்டு நடித்தேன்'' என்றார்.