59 அடி உயர 75வது சுதந்திர தின நினைவுத்தூண்
சிங்க உருவம், அசோக சக்கரம், தமிழ்நாடு அரசு முத்திரை இடம் பெற்றுள்ளது
முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: ₹1. 95 கோடியில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தம் சாலை சந்திப்பில் 59 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் நினைவுத்தூண் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன்படி காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே, காமராஜர்-சிவானந்தம் சாலை சந்திப்பில் ஒரு இடமும், அண்ணாசாலையில் ஒரு இடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டன.
இதில், காமராஜர் சாலை மற்றும் சிவானந்தம் சாலை சந்திப்பில் நினைவுத்தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நினைவுத்தூண் அமைக்கும் பணிக்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சிஎம்டிஏ, கடற்கரை ஒழுங்குறை மண்டல ஆணையம், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை உட்பட 6 துறைகளிடம் அனுமதி பெறப்பட்டன.
இப்பணிக்காக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு காமராஜர் சாலை மற்றும் சிவானந்தம் சாலை சந்திப்பில் ₹1. 95 கோடி செலவில் நினைவுத்தூண் அமைக்கும் பணியை பிஎஸ்கே என்கிற ஒப்பந்த நிறுவனம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இப்பணியை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.