நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக!
|
தோழமை கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க திமுக தலைமை பேச்சுவார்த்தை குழுவிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசிகவுக்கு 8 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக நேரடியாக 160 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்கள் வரை களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
|
|
ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளன. இதனால் புதிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பிப்ரவரி 22ஆம் தேதியில் இருந்து திமுக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், மக்கள் நீதி மய்யம், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கருணாஸ், தமீமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை, தவாக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தேமுதிகவை காரணம் காட்டி விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன்பின் திமுகவின் சீனியர்கள் பலரும் அந்தந்த கட்சித் தலைமையுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதற்கு பலன் கிடைத்துள்ளது. விசிக 8 தொகுதிகளுக்கும், சிபிஐ 6 தொகுதிகளுக்கும் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறது. இதனால் அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக 160 தொகுதிகளுக்கு குறையாமலும், உதயசூரியன் சின்னம் 175 தொகுதிகளிலும் களமிறங்கக் கூடும் என்று தெரிகிறது. திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, திமுக கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு அண்ணா அறிவாலயம் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. |