கனடாவில் போலி உரிமம் வைத்திருந்து 900 விமானங்களை இயக்கிய நபர்!
|
முன்னாள் விமானி ஒருவர், கடந்த 17 ஆண்டுகளாக முறையான உரிமம் இன்றி ஆயிரக்கணக்கான பயணிகளுடன் 900 விமானங்களை இயக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 59 வயதான ஏர் கனடாவின் முன்னாள் விமானி ஜெஃப்ரி வால் என்பவரே 2009-ல் விமானியாகப் பதவி உயர்வு பெற்றதிலிருந்து போலிச் சான்றுகளை உருவாக்கிக் கொண்டவர். |
|
கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே அந்த விமானி பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஏர் கனடா தெரிவித்தது. மேலும், நிறுவனம் இந்த விவகாரத்தை கனடா போக்குவரத்துத் துறைக்குத் தானாக முன்வந்து தெரிவித்தது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அனைத்து விமானிகளும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேற்கொள்வதால், பயணிகளின் பாதுகாப்பு ஒருபோதும் ஆபத்துக்குள்ளாகவில்லை என்று விமான நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த நிலையில், 1998-ஆம் ஆண்டு முதல் ஏர் கனடா நிறுவனத்தில் வால் விமானியாகப் பணியாற்றி வந்ததாக பீல் பிராந்தியக் காவல் துறையின் துணைத் தலைவர் நிக் மிலினோவிச் தெரிவித்தார். மேலும், விமானத்தின் பொறுப்பு விமானியாகப் (pilot-in-command) பதவி உயர்வு பெற்றதிலிருந்து, அந்த விமானி தனது தகுதி விவரங்களைத் தவறாகக் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிக்கு விமானப் போக்குவரத்து விமானி உரிமம் (ATPL) கட்டாயமாகும். முறையான தகுதி இல்லாமலேயே, பல்வேறு வகையான போயிங் (Boeing) விமானங்களை, மொத்தம் 900 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களையும் இயக்கி, பல மில்லியன் டொலர்களை வால் சம்பாதித்ததாகத் தெரியவருகிறது. வழக்கமான சோதனைகளின்போது விமானியின் உரிமத்தில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன; இது கனடாவின் மத்திய போக்குவரத்துத் துறையான 'டிரான்ஸ்போர்ட் கனடா' (Transport Canada) விசாரணையை மேற்கொள்ளத் தூண்டியது. இந்த நிலையில், ஜூன் 1 அன்று, மோசடி, ஆவணங்களை போலியாகத் தயாரித்தல் மற்றும் போலியான முத்திரையை வைத்திருத்தல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் வால் மீது சுமத்தப்பட்டன. இதனிடையே, விமானி முழுமையான பயிற்சி பெற்றவராகவும், செல்லுபடியாகும் வணிக விமானி உரிமம் (commercial pilot licence) கொண்டவராகவும் இருந்தார்; ஆனால், கனடிய விதிமுறைகளின்படி முதன்மை விமானியாக செயல்படுவதற்குத் தேவையான ATPL உரிமம் அவரிடம் இருக்கவில்லை என்று ஏர் கனடா தெரிவித்துள்ளது. |