சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

11.06.2022 06:03:41


இந்த கடினமான காலப்பகுதியில் தமது கொள்கைகளுக்கு அமைய  இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார மற்றும் கையிருப்பின்மையை எதிர்நோக்கியுள்ளமை தெட்டத்தௌிவாக புலப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜெரி ரைஸ்  கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் சர்வதேச நாணய நிதியத்தினூடாக நடத்தப்பட்ட தொழில்நுட்ப கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு, ஒத்துழைப்புகளை வழங்கும் செயற்றிட்டம் குறித்து கொள்கை ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட தமது பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்  தெரிவித்துள்ளார்.