நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்றது ஐகோர்ட்டு

22.07.2021 10:50:29

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். மேலும் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று, வழக்கை தீர்ப்பு நகலின்றி பட்டியலிட உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.