'ஈகை' படத்தில் வில்லனாக நடிக்கும் சந்தோஷ் பிரதாப்
அனைத்துவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க கூடிய தகுதியும், திறமையும் இருந்தும் முன்னணி நட்சத்திர கலைஞராக ஜொலிக்க முடியாமல் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தோஷ் பிரதாப்,' ஈகை' எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈகை' எனும் திரைப்படத்தில் நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவருடன் அருண் எனும் காவல்துறை உயரதிகாரி வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். இந்த கதாபாத்திர தோற்றத்திற்கான பிரத்யேகப் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் 'எதுவும் செய்யாமல் அநியாயம் செய்யலாம்' என்ற வாசகத்தையும் ஆங்கிலத்தில் இடம்பெற வைத்திருப்பதால் சந்தோஷ் பிரதாப் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என தெரிய வருகிறது.
இவர்கள் இருவருடனும் சேர்ந்து அபி நட்சத்திரா, ஹரி, கௌதம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பிருந்தா கிருஷ்ணா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிருஷ்ணசங்கர் ராமபத்ரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் வெளியீடு குறித்த பல தகவல்கள் இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் தற்போது படத்தில் சில மாற்றங்களை உருவாக்கி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியான 'சர்பட்டா பரம்பரை', 'கொன்றால் பாவம்', 'பத்து தல', 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்', 'கழுவேத்தி மூர்க்கன்' போன்ற படங்கள் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதால் அவரின் நடிப்பில் தயாராகும் 'ஈகை' திரைப்படத்திற்கும் திரையுலகினரிடையே ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.