ஜப்பானிய அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் உதவி கோரினார்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய தூதூவர் அகியோ இசமோட்டாவுக்கும் (Akio Isamota) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் நிலைமை குறித்து இரு தரப்பினரும் நீண்ட கருத்துக்களை இங்கு பரிமாறிக் கொண்டனர். சிறப்பு மதிப்பீடு மற்றும் நிவாரணக் குழுக்களை ஜப்பான் இலங்கைக்கு அனுப்பி வைத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேபோல், கடந்த காலங்களில் இலங்கை இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொண்டபோது ஜப்பான், ஒரு நீண்டகால நண்பராக, இலங்கையைத் தனிமைப்படுத்தாது போல், இம்முறையும் இலங்கைக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவத்துடன் கேட்டுக் கொண்டார்.
சேதமடைந்த வீதிகளை நவீனமயமாக்கவும், ரயில் போக்குவரத்துப் பாதைகள் கட்டமைப்புகளைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட நிபுணத்து அறிவையும், தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் படிமுறையாக இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள பரந்த சேதங்கள், பாரிய வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்வு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு காணப்படும் இடர்பாடுகள் உள்ளிட்ட இந்தப் பேரழிவின் விசாலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தூதுவருக்கு விளக்கமளித்தார்.
பிரதான வைத்தியசாலைகளில் இன்னும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், பேரழிவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு இது தடையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்நேரத்தில் இலங்கைக்கு ஜப்பானின் ஆதரவு மிகவும் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த நெருக்கடியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை துரிதமாக இலங்கைக்குப் பெற்றுத் தருமாறும் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
கிடைக்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நிவாரணங்களும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதனை உறுதி செய்ய, வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் அரசியல்மயமாக்கப்படாத பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.