வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் : புதிய சுற்று நிருபத்துக்கு எதிராக ரீட் மனு

20.01.2022 06:41:41

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும்,  அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின்  ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள  சுற்று நிருபத்துக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி திஷ்ய வேரகொட இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பதிவாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகர,  பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலர்  எஸ்.எம். முனசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை கையொப்பமிட்ட மனித உரிமைகளுக்கான சர்வதேச  பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக, ஒவ்வொரு நபரும் தாம் விரும்பும் எந்தவொரு நபரையும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் இருப்பதாக மனுதாரர் மனுவூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் இலங்கையில் வெளிநாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும், தனது மனைவி இலங்கையின் இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அத்துடன் தமது சிறுபராய பிள்ளைகள் தற்போது வெளிநாட்டு பிரஜைகளாக உள்ளதாகவும்  மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான முன்நிபந்தனையாக  ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவாளர் நாயகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அதனை ரத்து செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என  மனுவில் கோரப்பட்டுள்ளது.