மதுராந்தகம் இடைத்தேர்தல் மல்லு கட்டும் கட்சிகள்!
|
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 167 வாக்குச்சாவடி கட்டிடங்களில், 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 8 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 27 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஐந்து முனை போட்டி நிலவினாலும் தவெக, திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. |
|
ஒரு மாத காலமாக வேட்பாளர்களும் தீவிர பிரசரத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை மக்கள் தங்கள் தீர்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். மரகதம் குமரவேல் ராஜினாமா தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தேர்தல் தோல்வியால் அதிமுகவிற்குள் எடப்பாடிக்கு எதிராக கலககுரல்கள் வெடித்தன. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி ), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்தனர். விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வழக்கு தொடர்பாக மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து இதர தொகுதிகளுக்கு தேர்தல நடத்துவதில் சிக்கல் எழுந்தது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக மேற்கூறிய ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. அக்டோபர் 6-ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 20 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தற்போது 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், அஅதிமசெக சார்பில் புவனேஸ்வரி, ஊஒசெக சார்பில் முத்துசெல்வம், இகுக (சிவராஜ்) சார்பில் ரவிகுமார், ஜெயமணி ஜனதா சார்பில் எம்ஜி ராமு, தேமசக சார்பில் கோ ராஜசேகர் சுயேச்சை வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக க ஆறுமுகம், எஸ் ஆறுமுகம், இளையரசு, எழில், கதிர்வேல், கயல்விழி, கிருஷ்ணகாந்த் சதீஷ்குமார், நவீந்தர், பாஸ்கரன், மனோகர், முருகன், மூர்த்தி, ரஞ்சிதம், ராஜாமணி, லோகேஷ், ஜெகன் என்று 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 2,12,636 வாக்காளர்கள் இருந்தனர்.. இதில் ஆண்கள் 1,04,496 பேர்களும், பெண்கள் 1,08,075 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 65 பேர்களும் ஆவர். கடந்த தேர்தலை விட, இந்த இடைத்தேர்தலுக்கு ஆண்கள் 430 பேரும், பெண்கள் 722 பேரும் அதிகரித்து, புதிதாக 1,152 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறை மதுராந்தகம் தொகுதியில் 2,13,788 பேர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த முறை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: மரகதம் குமரவேல் (அதிமுக): 69,284 எழில் கேத்ரின் எழில்மலை (தவெக): 62,090 எஸ் அமுலு பொன்மலர் (திமுக): 59,838 ஜானகிராமன் (நாம் தமிழர்): 4,950 விஜய் தீவிர பிரசாரம் கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலே மீண்டும் நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது. முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தத்தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. இதையடுத்து தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இன்று முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது. 8 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை மதுராந்தகம் தொகுதியில் 167 வாக்குச்சாவடி கட்டிடங்களில், 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 8 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. காலாண்டு விடுமுறை நிறைவு.. இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு! மதுராந்தகம், தாராபுரம் நிலவரம் என்ன? இந்த தேர்தல் வழக்கமான இடைத்தேர்தலாக இல்லாமல் பொதுத்தேர்தலுக்கு நிகரான பரபரப்புடன் நடைபெற்றது. ஆளும் தவெக தனது 4 மாத ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழாகவும், ஆட்சியை ஸ்திரமாக நடத்த இந்த வெற்றி அவசியம் தேவை எனக்கருதுவதால் இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது. முதல்வர் விஜய் சட்டமன்ற தேர்தலை விட அதிக சிரத்தை எடுத்து பிரசாரம் மேற்கொண்டார். வாகை சூடுவது யார்? அதேபோல, தவெக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை நிரூபித்து காட்டும் வாய்ப்பாக இந்த தேர்தல் வெற்றியை திமுக பார்ப்பதால் அக்கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அதிமுகவும் தன் வசம் இருந்த தொகுதியை தவெக பறித்துவிட்டதாக எண்ணுவதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் உள்ளது. களத்தில் ஐந்து முனை போட்டி இருந்தாலும் தவெக, திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு மாத காலமாக வேட்பாளர்களும் தீவிர பிரசரத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை மக்கள் தங்கள் தீர்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று யார் வாகை சூடினர் என்பது தெரியவரும். |