
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். இதையொட்டி கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் - கவர்னர்
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்தியத் திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.