சரமாரி பதில் தாக்குதலில் அதிமுக ஐடி விங்!

29.09.2026 15:35:37

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். திரைப்படத்தில் நடிப்பது போல கூட்டங்களில் கை, கால்களை ஆட்டி பேசுவது மட்டுமே முதல்வர் விஜய்க்கு வரும்.

ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள். அதனால் விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இனிமேல் நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். தவெகவின் ஒரே மூலதனம் என்ன தெரியுமா? அது ரீலும், ரீல்ஸும் தான். ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு துரும்பைக் கூட முதல்வர் விஜய் கிள்ளிப் போடவில்லை; ரீல் விட்டுக்கொண்டே இருக்கிறார், இது ரியல் ஆட்சி இல்லை. ரீல் ஆட்சி. உங்கள் வீட்டு அண்ணனாக இருப்பேன், தம்பியாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று பச்சைப் பொய் பேசுகிறார். பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் அங்கேதான் பிறக்கும்.

படங்களில் வீர வசனம் மட்டும்தான் பேசுவார். நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்கிறோம். மக்களை குழப்பி தவெக வெற்றி பெற்றுள்ளது. சனி, ஞாயிறு என்றால் முதல்வர் விடுமுறை எடுத்துக் கொள்வார். திங்கள்கிழமைதான் திரும்ப வருவார்." என விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.

நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார். கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.

திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி." எனத் தெரிவித்துள்ளது.

அதிமுக பதிலடி தவெக ஐடி விங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்? "ல்தகா சைஆ" போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!! குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா? அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்? பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல! கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜய்யின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா? இன்று வாய்கிழிய "தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்" என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்... மன்னிக்க... ஆச்சரியக்குறிக்கு, கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா? தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், எடப்பாடி பழனிசாமியின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா? ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா? செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா? ஆதிவாசி... அடக்கி வாசி!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.