எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்!

14.10.2024 07:48:49

லெபனானில் இருந்து உடனடியாக அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா அமைதிப்படையானது ஹிஸ்புல்லாவின் பணயக்கைதிகளாகவும் மனிதக் கேடயங்களாகவும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

   

இதனிடையே, லெபனானில் தங்கள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் டாங்கிகள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் ஐ.நா அமைதிப்படையினரின் உயிருக்கு அவர்கள் அச்சுறுத்தலாக மாறி வருகின்றனர் என்றும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஐ.நா முகாம்கள் மீது வலுக்கட்டாயமாக நுழைவது என்பது சர்வதேச சட்ட மீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், தங்கள் நடவடிக்கையை ஆதரித்து பேசியுள்ள இஸ்ரேல், காயம்பட்ட வீரர்களை மீட்கும் நடவடிக்கை அதுவென விளக்கமளித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் ஊடுருவியதன் பின்னர் 1978 முதலே ஐ.நா அமைதிப்படையினர் சுமார் 10,000 வீரர்கள் லெபனானில் இயங்கி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கை கட்டுப்படுத்துவதே அமைதிப்படையினரின் பணியாக உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமைதிப்படையினர் ஐவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த விவகாரம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 40 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அமைதிப்படைகள் மீதான தாக்குதலை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளதுடன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஆனால் அமைதிப்படையினரை லெபனானில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் இஸ்ரேல் வலுவாக உள்ளது.

இதனிடையே, ஐ.நா அமைதிப்படையினர் மீது இஸ்ரேல் புகை குண்டை வீசியதாகவும், சுமார் 15 பேர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா அமைதிப்படையினரை பணயக்கைதியாக நடத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதற்கு ஹிஸ்புல்லா மறுப்பு தெரிவித்துள்ளது.