தேனீக்களை உடலில் பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்

20.05.2022 15:38:21

உலக தேனீக்கள் தினத்தையொட்டி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவரை அப்பகுதி மக்கள், மாணவர்கள் பலர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியமரத்து  செட் பகுதியில் தேனீக்கள் பண்ணை நடத்தி வருபவர் இசாக். அவருடைய மகன் முகமது தில்ஷான் (வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து தேனீக்கள் பண்ணைக்கு வந்து உதவி செய்து வருகிறான். இந்த நிலையில் உலக தேனீக்கள் தினத்தையொட்டி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தான்.

அதன்படி நேற்று தனது உடலில் தேனீக்கள் பரவ செய்து விழிப்புணர்வு செய்தான். அதாவது கழுத்து பகுதியில் தாடியை போல தேனீக்களை பரவவிட்டு அசத்தினான் இதை அறிந்த அப்பகுதி மக்கள், மாணவர்கள் பலர் வந்து ஆச்சரியத்துடன் முகமது தில்ஷானை பார்த்து சென்றனர்.

 

இதுகுறித்து மாணவனின் தந்தை கூறுகையில், தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலி தேனீ, இந்திய தேனீ, கொசுதேனீ என 5 வகைகள் உள்ளன. இதில் கொசு தேனீக்களின் தேனுக்கு மவுசு அதிகம் ஒரு கிலோ தேன் ரூ.6 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது தாவரங்களின் மகரந்த சேர்க்கை, விளைச்சல் ஆகியவற்றுக்கு தேனீக்கள் அத்தியாவசியமானது. எனவே விவசாயிகளிடம் தேனீக்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறேன்.

 

தேனீக்கள் பண்ணையில் நான் வேலை செய்யும் போது எனது மகனும் ஆர்வமுடன் வந்து உதவி செய்வான். அதை தொடர்ந்து தற்போது தேனீக்கள் முக்கியத்துவம் குறித்து உடலில் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு செய்தான். மகனுடன் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறேன் என்றார்.