இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

19.02.2024 23:19:00

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க T20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

 

இப்போட்டி ஆரம்பமாகி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களையும் அதிரடி காட்டிய மத்தியூஸ் 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 23, ஹசர்ங்க 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் பசல்ஹக் பாரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனை தொடந்து 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆப்கானிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டினை இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க வீழ்த்திய போது T20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய வீரரர்களின் பட்டியலில் இணைத்துக்கொண்டார்.

விரைவாக 100 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீத் கான் உள்ளார். அவர் 52 போட்டிகளில் இந்த மைக்கல் எட்டியிருந்தார். இதனை தொடந்து 63 போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை வனிந்து ஹசரங்க தனதாக்கி கொண்டார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கரீம் ஜனத் 28 ஓட்டங்களையும் மொஹமட் நபி 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்யூஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.