இங்கிலாந்து மருத்துவமனை வளாகத்தில் கார் குண்டுவெடிப்பு

15.11.2021 08:59:50

இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லிவர் பூல் நகரில் உள்ள பிரபல மருத்துவமனை அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டாக்சி ஒன்று மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் அது வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பு சம்பவத்தால் மருத்துவமனையில் பதற்றம் தொற்று கொண்ட நிலையில், தீவிரவாத தடுப்புப் படையினர் அங்கு விரைந்தனர். குண்டு வெடிப்பில் சிக்கிய காரில் இருந்த ஆண் பயணி உயிரிழந்தார்.காரில் இருந்த ஓட்டுனர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 21, 26,29 ஆகிய வயதுகள் உடைய 3 இளைஞர்களை தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர். உடனடியாக இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்பதை உறுதி செய்ய முடியாது என்று தெரிவித்து இருக்கும் போலீசார், நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மருத்துவமனை வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கவலை தெரிவித்து இருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போரில் இறந்தவர்களை நினைவு கூறும் தினம் நேற்று பிரிட்டனில் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.