அமெரிக்காவை அடைய கூடிய புதிய ஏவுகணை

21.12.2022 16:39:17

வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  அதிபர் கிம் ஜாங் உன்னின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல எப்போதும் தென் கொரியாவுடன் ஒரு மோதலான போக்கையே வட கொரியா கொண்டு வந்துள்ளது.

உலகின் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்று தென் கொரியா. குறிப்பாகத் தொழில்நுட்ப ரீதியாக தென்கொரியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இராணுவ ஏவுகணை

அதேநேரம் அருகிலேயே உள்ள வடகொரியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு ஒரே காரணம் அங்கு நடைபெற்று வரும் கிம் ஜாங் உன் ஆட்சி தான்.

இது வடகொரியாவின் வளர்ச்சியை அப்படியே முடக்கிப் போட்டுவிட்டது. அங்குள்ளவர்களுக்கு வெளியுலகத்துடன் பெரியளவில் தொடர்பும் இருப்பதில்லை. அதேபோல தொடர்ச்சியாகத் தென் கொரியாவைச் சீண்டுவதையும் வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது.

மேலும், தொடர்ச்சியாக புதிய புதிய ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தும். அந்நாட்டு மக்கள் உணவின்றி தவித்தாலும் கூட வடகொரியா அதன் இராணுவ ஏவுகணை சோதனைகளை ஒருபோதும் நிறுத்தாது.

புகைப்படம்

இதற்கிடையே வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் புதிய ஏவுகணை சோதனையை மேற்பார்வையிடும்போது சிரித்தபடி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வட கொரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

static firing test என்ற வகையான இந்த ஏவுகணையை முதல் முறையிலேயே வெற்றிகரமாக வடகொரியா நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

'உயர் உந்துதல் திட எரிபொருள் மோட்டார்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிகரெட் பிடித்தபடி அதைச் சிரித்துக் கொண்டே ரசிக்கும் கிம் ஜாங் உன் படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவைக் கூட அடைய முடியும்

புதிய சோதனை அதில் பின்னால், ஏவுகணை சோதனையில் இருந்து பெரியளவில் புகை கிளம்ப, முன்னால் சிரித்தபடி கையில் சிகரெட் உடன் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மாற்றிய ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார். அடுத்த ஆயுதத்தையும் வல்லுநர்கள் மிக விரைவில் உருவாக்குவார்கள் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மேம்பட்ட இராணுவ ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது. அதிகபட்சம் இந்த ஏவுகணையால் அமெரிக்காவைக் கூட அடைய முடியும்.

இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதிய ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியிலும் அந்நாட்டு இராணுவம் இறங்கியுள்ளது.

நீண்ட தூரத் திரவ ஏவுகணை

சமீப காலங்களாகவே வட கொரியா போர்க்கப்பல்களில் எடுத்துச் செல்லக் கூடிய அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அதன் நீண்ட தூரத் திரவ ஏவுகணையான Hwasong-17 ICBM ஐ தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் வட கொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் கடலில் சுமார் 130 பீரங்கி குண்டுகளை வீசியதாகத் தென் கொரியா கூறியுள்ளது.

இப்படி எல்லையில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே முதல் முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது மகளுடன் கடந்த 19ஆம் திகதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பல விவாதங்கள்

அவர்கள் ஏவுகணை சோதனையை ஒன்றாக இணைந்து ஆய்வு செய்தார்கள். அவரது மகள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 27ஆம் திகதி Hwasong-17 ஏவுகணை சோதனையின் போது விஞ்ஞானிகளுடன் இருந்தார்.

கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும் தகவல் பரவி வரும் நிலையில், அவரது மகள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.