மக்காவில் 19 வெளிநாட்டு யாத்திரீகர்கள் உயிரிழப்பு!

17.06.2024 09:19:45

சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெப்பத் தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 1600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் மக்காவிற்கு அனுப்பியுள்ளது.

அத்துடன், 30 விசேட குழுவினரும் 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவித் தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் இணைந்து உயிாிழந்தர்களின் உடல்களை ஜோர்டானுக்கு அனுப்புவதற்கான பணிகளை ஜோர்டான் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்காவிற்கு புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமானது. இதற்காக 15 இலட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்காவிற்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.