தமிழ்நாட்டில் விரைவில் 50 மாவட்டங்கள்.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அவர், கடந்த நூறு நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு 39.26 லட்சத்திற்கும் அதிகமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பத்திரப்பதிவு செய்யும்போதே 45 சதவீதத்தினருக்கு பட்டா வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் வறட்சி நிவாரணம் குறித்துக் குறிப்பிட்ட அவர், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உரிய குழு அமைக்கப்பட்டு வறட்சி மாவட்டங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், நிர்வாக வசதிக்காகப் புதிதாக 20 தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்றும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட 83 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பேரிடர் காலங்களைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.