டி.என்.ஏ.,வால் தற்போது குற்றவாளி கண்டுபிடிப்பு!

24.11.2021 13:11:00

அமெரிக்காவில் 62 ஆண்டுகளுக்கு முன் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு, நவீன டி.என்.ஏ., தொழில்நுட்பம் மூலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அவரை 20 வயது இளைஞன் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். அந்நபர் 1970-ல் இறந்தும் விட்டார்.

1959-ல் வாஷிங்டனின் ஸ்போகேன் பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. 2 வாரங்களுக்கு பிறகு அவரது உயிரற்ற உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. அவரை பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். அவ்வழக்கில் ஜான் ரீக் ஹாப் எனும் 20 வயது அமெரிக்க ராணுவ வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் குற்றம் நிரூபணமாகாததால் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை. அவர் 1970-ல் இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.

டி.என்.ஏ., போன்ற நவீன அறிவியல் வசதிகள் இல்லாத சமயத்தில் இவ்வழக்கை தீர்க்க முடியாமல் ஸ்போகேன் மாவட்ட போலீசார் திணறியுள்ளனர். இவ்வழக்கை ஹிமாலய வழக்கு என்றே அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் இருந்த விந்து மாதிரியை டெக்சாஸில் உள்ள டி.என்.ஏ., ஆய்வகம் ஆய்வு செய்து வந்தது. அதில் குற்றம்சாட்ட ஜான் ரீக்கின் மாதிரியுடன் சிறுமியின் உடலிலிருந்த மாதிரியும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தினர். மற்ற சந்தேக நபர்களுடன் ஒப்பிடும் போது 25 குவின்டில்லியன் அளவு ஜான் ரீக்கின் மாதிரியுடன் ஒத்து போயுள்ளது.

இது குறித்து அமெரிக்க காவல் துறை, “தலைமுறைகளாக விடாமுயற்சியுடன் துப்பறியும் நிபுணர்கள் இறுதியாக சிறுமியின் கொடூரமான கொலையைச் சுற்றியிருந்த மர்மத்தை தீர்த்துள்ளார்கள்.” என பாராட்டியுள்ளது.