எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

04.04.2026 20:44:55

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கு அயர்லாந்தில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.

 

அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு அயர்லாந்தில் பெப்ரவரி மாத இறுதி முதல் பெற்றோல் விலை 19 சதவீதம் உயர்ந்துள்ளடன், டீசல் விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வாகன சாரதிகள் 50 லிட்டர் தொட்டியை நிரப்புவதற்கு பெற்றாலுக்கு சராசரியாக 75 பவுண்ட்களும் டீசலுக்கு 91 பவுண்ட்களும் செலவிட்டுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடங்கிய நாளான பெப்ரவரி 28 அன்று வாகன சாரதிகள் அ‍தே 50 லீட்டர் தொட்டியை நிரப்புவதற்கு பெற்றோலுக்கு 63 பவுண்ட்களும், டீசலுக்கு 67 பவுண்ட்களும் செலவிட்டிருந்தனர்.

கடுமையான போட்டி, பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் குறைதல் மற்றும் அயர்லாந்துடனான தொடர்புகள் ஆகியவற்றின் காரணமாக, வடக்கு அயர்லாந்து பல ஆண்டுகளாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் மிகக் குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்டிருந்தது.

எனினும், மத்திய கிழக்கில் மோதல் தணியும் அறிகுறிகள் தென்படாததால், ஐக்கிய இராச்சியம் முழுவதும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதன் பின்னணியில் இந்த உயர்வு இடம்பெற்றுள்ளது.

 

வடக்கு அயர்லாந்தை விட வேறு ஏழு ஐரோப்பிய நாடுகளிலும் எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக யூரோஸ்டாட் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத் தரவுகளின் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஆஸ்திரியாவில் எரிபொருள் விலை கிட்டத்தட்ட கால் பங்காக உயர்ந்துள்ளதுடன், எஸ்தோனியாவில் இதன் விலை 44 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.