ஆறாவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் !

12.07.2021 10:41:10

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், பெரெட்டினி முதல் செட்டில் ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் 6-7 என பெரெட்டினி போராடி முதல் செட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 6-4 என செட்டைக் கைப்பற்றி ஜோகோவிச் பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து களத்தை ஆக்கிரமித்த ஜோகோவிச், 6-4, 6-3 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

3 மணித்தியாலங்கள்; 24 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம், நோவக் ஜோகோவிச் 20ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். அத்துடன் இது ஆறாவது விம்பிள்டன் சம்பியன் பட்டமாகும்.

இதன் மூலம் 20ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார்.

முன்னதாக அத்தகைய சாதனையை முதல் வீரராக சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 2018ஆம் ஆண்டு எட்ட, அதை ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2020ஆம் ஆண்டு எட்டி சமன் செய்தார். தற்போது அந்த 20 கிராண்ட்ஸ்லாம் வரிசையில் ஜோகோவிச்சும் இணைந்துள்ளார்.

ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 5 ஏடிபி பைனல்ஸ், 36 மாஸ்டர்ஸ் சம்பியன் பட்டங்கள் என மொத்தமாக 61 சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.