பரனூர் சுங்கச்சாவடியில் செல்வோர் கவனிக்க வேண்டியவை.

02.10.2026 08:16:19

தமிழ்நாட்டிலேயேமுதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டண வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க தேவையில்லை. இந்தசுங்கச்சாவடி குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பினை பாப்போம்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'மல்டி லேன் ஃபிரீ ஃபுளோ' எனப்படும் புதிய தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டண வசதி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த புதிய முறையில் விரைவு சுங்கக்கட்டண அடையாள அட்டை மற்றும் தானியங்கி வாகன பதிவு எண் அடையாளம் காணும் தொழில்நுட்பம் போன்றவை இணைந்து செயல்படுகிறது. வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கரை லையில் பொருத்தப்பட்டுள்ள வானொலி அலைவரிசை அடையாளம் காணும் கருவி கண்டறியும்.

அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி வாகனப்பதிவு எண் அடையாளம் காணும் கேமரா மூலம் வாகனத்தின் பதிவு எண் படம் பிடிக்கும். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டு சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அடையாள அட்டை கணக்கில் இருந்து சுங்க கட்டணம் தானாக வசூலிக்கப்படும். விரைவு சுங்க கட்டண அடையாள அட்டை தகவல் சரியாகப் பதிவாகாத சூழ்நிலையில், தானியங்கி வாகன பதிவு எண் அடையாளம் காணும் கேமரா மூலம் வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் இந்த இரட்டை அடுக்கு தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சுங்க கட்டணம் வசூலில் ஏற்படும் தவறுகள் ஏற்படாது. வருவாய் இழப்பு குறையும். இதன் மூலம் அரசின் சலுகை பட்டியலில் இல்லாத எந்த ஒரு வாகனமும் கண்டிப்பாக கட்டணம் செலுத்தியாக வேண்டும். பரனூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி காரணமாக சுங்கக்கட்டண வசூல் மையங்கள் மற்றும் தடுப்புகள் இல்லாமல் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் வகையில் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் இந்த தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டண முறைக்கான சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

பரனூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறைக்கான வழிமுறைகள்: உங்கள் FASTag-ஐ விண்ட்ஸ்க்கரீனில் சரியாகப் பொருத்தி, போதுமான பணம் இருப்புடன் செயல்பாட்டில் வைத்திருங்கள். போதுமான பணம் இல்லாதிருந்தாலோ அல்லது செல்லாத ஃபாஸ்டேக் (FASTag) வைத்திருந்தாலோ, சுங்கக் கட்டணத்தைப் போல் இருமடங்கு தொகைக்கு மின்னணு அறிவிப்பு அனுப்பப்படும். மின்னணு அறிவிப்பு வெளியிடப்படும்போது, வாகனத்தின் ஃபாஸ்டேக் சேவைகள் இடைநிறுத்தப்படும். https://nhfeenotice.parivahan.gov.in என்ற NIC தளத்தில் மின்னணு அபராத அறிவிப்புகளைப் பார்த்து பணம் செலுத்துங்கள். 72 மணி தொகை நேரத்திற்குள் செலுத்தப்படாவிட்டால், உபயோகிப்பாளர் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கப்படும். உபயோகிப்பாளர், ஏதேனும் குறை இருப்பின், அதனை NIC போர்ட்டலிலும் தெரிவிக்கலாம்.

மின்னணு அறிவிப்புகளுக்குக் கட்டணம் செலுத்தத் தவறினால், பொருந்தக்கூடிய வகையில், தடையில்லாச் சான்றிதழ் (NOC), உரிமை மாற்றம், தகுதிச் சான்றிதழ் மற்றும் தேசிய பெர்மிட் போன்ற தொடர்புடைய வாகனச் சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடலாம். உங்கள் வாகனத்தில், தெளிவாகவும் படிக்கக்கூடியதாகவும் உள்ள தரப்படுத்தப்பட்ட வாகனப் பதிவு எண்ணை (உயர் பாதுகாப்புப் பதிவு எண் பிளேட்) மட்டுமே பயன்படுத்துங்கள்.