யூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி !

12.07.2021 10:39:57

பல கோடி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற, யூ.இ.எஃப்.ஏ. யூரோ கிண்ண கால்பந்து தொடரில், இத்தாலி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

16ஆவது யூ.இ.எஃப்.ஏ. யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டன்- வெம்ப்லி விளையாட்டரங்களில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா கோல் அடித்து அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளால் முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், 67ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்து கோல் கணக்கை சமநிலைப்படுத்தினார்.

இதன்பிறகு முன்னிலை கோலை புகுத்த இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், அது பலனளிக்கவில்லை. அத்துடன் கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

இத்தாலி அணிக்கு இது இரண்டாவது சம்பியன்ஷிப் பட்டமாகும். முன்னதாக இத்தாலி அணி 1968ஆம் ஆண்டு யூகோஸ்லாவியாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இதேவேளை இம்முறை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, 1968ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்திருந்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கிண்ணத்தை வென்றதிலிருந்து இங்கிலாந்து முன்னேறிய முதல் பெரிய இறுதிப் போட்டி இதுவாகும்.

நடப்பு தொடரில், சிறந்த வீரராக இத்தாலியின் கோல் காப்பாளர் கியான்லூகி டோனாரும்மா தெரிவுசெய்யப்பட்டார்.

போட்டியின் நட்சத்திர வீரராக லியனார்டோ போனுக்கி தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் நடப்பு தொடரின் இளம் வீரரான ஸ்பெயின் மத்திய கள வீரரான பெட்ரி தெரிவுசெய்யப்பட்டார்.

தங்க பாதணி விருது போர்துக்கல் அணியின் கிறிஸ்டீயானோ ரொனால்டோவுக்கு கிடைத்தது. அதிக கோல்களை போடுவதற்கு உதவியதற்கான விருது சுவிஸ்லாந்தின் ஸ்டீவன் சுபருக்கு கிடைத்து.