பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்!

11.07.2022 09:32:21

தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம்

அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம்கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதி

கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்தபடி வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், அரச தலைவர் பதவியை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணிலின் கனவு 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேறுமானால் இதுவரை காலமும் அரச தலைவர் பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும் என பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றன.

எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், அரச தலைவர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் பரவலாக அரசியல் வட்டாரங்கள் இடையே எழுந்துள்ளது.