18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா

20.04.2024 07:00:00

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
 

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். ஹாரர் த்ரில்லர் படமான ஷைத்தான் குஜராத்தி மொழியில் வெளியான ‘வாஷ்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மெல் வசூலித்தது.
 

இந்நிலையில் இப்போது சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பட்டியலில் ஹலிதா ஷமீம் மற்றும் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் ஆகியோர் உள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா ஜோதிகா இருவரும் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.