கடத்தல்காரர்களின் ரூ.1,004 கோடி சொத்துகள் முடக்கம்.

22.10.2026 14:37:46

போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களில் ஈடுபடுவோருக்குச் சொந்தமான 1,004 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“2024 செப்டெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் 183 கோடி ரூபாவும், 2026ஆம் ஆண்டில் 819 கோடி ரூபாவும் பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 10,040 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

 

சட்டவிரோதமாகச் சம்பாதிக்கும் பணத்தைத் தம்வசம் வைத்திருக்க முடியாது என்பதே இந்த நடவடிக்கையின் மூலம் வழங்கப்படும் செய்தியாகும். சட்டவிரோதச் செயற்பாடுகள் மூலம் சொத்துகளைப் பெற்றிருந்தால், அவற்றைத் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாது. நீதியை நிலைநாட்டும் செயன்முறையை வினைத்திறனாக்குவதற்காகவே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

கடந்த காலத்தில்தான் பொலிஸ் அரசியல்மயப்படுத்தப்பட்டது. அந்த நிலையிலிருந்து பொலிஸாரை நாம் விடுவித்துள்ளோம். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகத்தையும் அணிதிரட்டியுள்ளோம். பொலிஸாரும் இதில் தீவிரமாகப் பங்களிக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்கின்றோம்.

 

கடந்த ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பாக 5 இலட்சத்து 88 ஆயிரத்து 100 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 இலட்சத்து 86 ஆயிரத்து 824 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 737 பேர் 21 வயதுக்குட்பட்டவர்கள்” என்றார்.