முடிவுக்கு வந்த விசா பிரச்சனை

04.08.2022 11:14:38

இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்கான விசா கிடைக்காமல் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதும் ஃப்ளோரிடாவுக்கு சென்றுவிட்டனர். வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் இந்திய அணி 2 -1 என முன்னிலை வகித்து வருகிறது.

இரு அணிகள் மோதும் கடைசி 2 போட்டிகள் மட்டும் நடைபெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முதல் டி20 போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்ற சூழலில் 2 மற்றும் 3வது போட்டி செயிண்ட் கிட்ஸில் நடைபெற்றது. ஆனால் கடைசி 2 போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்களுக்கு மட்டும் விசா கிடைக்கவே இல்லை.

இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அமெரிக்க செல்வதற்கான விசா கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் மீண்டும் செயிண்ட் கிட்ஸில் இருந்து ட்ரினிடாட் தீவுக்கு சென்று, அங்கு விசா பணிகளை செய்ய வேண்டியிருந்தது. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக விசா கிடைத்துவிடுமா என்பது சந்தேகமாகவே இருந்தது. இந்நிலையில் அனைவருக்கும் விசா கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஜார்ஜ் டவுன் நகரில் நேர்முக தேர்வு நடந்துள்ளது. இதன்பின்னர் அவசரகால விசா கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முழுவதும் ஃப்ளோரிடாவுக்கு சென்றுவிட்டனர். இந்திய அணி இன்று புறப்படும் எனத் தெரிகிறது. இரு அணிகளும் மோதும் 4-வது டி20 போட்டி 6-ம் தேதியும் 5-வது டி20 போட்டி 7-ம் தேதியும் ஃப்ளோரிடாவில் உள்ள செண்ட்ரல் போவார்ட் மைதானத்தில் நடைபெறுகிறது