'என் உயிர் உங்கள் காலடியில்' -
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைக்கு பிறகு உச்சநீதிமன்றம் கொடுத்த நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளார். |
வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி ''என் மீது அன்பும் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத்தினுடைய தலைவர், தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தினுடைய இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்காகும். இந்த பொய் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவேன். தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்போடு சமர்ப்பிக்கின்றேன்'' என தெரிவித்திருந்தார். இன்று உதயநிதியை சந்தித்த செந்தில்பாலாஜி, இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் வளைத்ததில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, '471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!' என தெரிவித்துள்ளார். |