
சீன வெளிவிவகார அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
சீனாவுடனான உறவுகளில் பதற்றங்களைத் தணிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (19) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை புது டெல்லியில் அமைந்துள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்திய-சீன எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
மேலும், நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைத் தீர்வுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியைச் சந்தித்த பின்னர் பிரதமர் மோடி எக்ஸில்,
வெளிவிவகார அமைச்சர் வாங் யியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
கடந்த ஆண்டு கசானில் ஜனாதிபதி ஜி (ஜி ஜின்பிங்)உடனான எனது சந்திப்பிலிருந்து, இந்தியா-சீனா உறவுகள் ஒருவருக்கொருவர் நலன்கள் மற்றும் உணர்திறன்களை மதிப்பதன் மூலம் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது தியான்ஜினில் நடைபெறும் எங்கள் அடுத்த சந்திப்புக்காக நான் காத்திருக்கிறேன்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, ஆக்கபூர்வமான உறவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் – என பதிவிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், ஆப்ரேஷன் சிந்தூரின் போது பெய்ஜிங் பாகிஸ்தானை ஆதரித்த போதிலும், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதற்றம் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களின் பின்னணியில் அண்மைய நாட்களில் தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வாங் யியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.