உஷா வான்ஸின் பூர்வீகம் எது?
அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் இந்தியாவில் தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறார் உஷா வான்ஸ்.
உஷா, அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜேம்ஸ் டேவிட் (ஜே.டி.) வான்ஸின் மனைவி என்பதே இதற்கு காரணம்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா தெலுங்கு பேசும் வம்சாவளியை சேர்ந்தவர். அவரின் உண்மையான பெயர் உஷா சிலுகுரி.
டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸை அறிவித்த பின்பு உஷாவின் பெயர் இந்தியாவில், குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் வைரலாக பரவி வருகிறது.
உஷாவின் உறவினர்கள் இன்னும் ஆந்திராவில் வசித்து வருகின்றனர்.
ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட உஷா சிலுகுரி
விசாகப்பட்டினத்தில் வசிக்கும் 96 வயதான பேராசிரியர் சிலுகுரி சாந்தம்மா, உஷாவின் நெருங்கிய உறவினர். அவர் அத்தை சாரதா சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
சாரதா பிபிசியிடம் பேசிய போது, அவரின் தாத்தாவும் அப்பாவும் ஆந்திராவின் மேற்கு கோதாவரிக்கு அருகே இருக்கும் தனுகு என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
ஆனால் வெகு ஆண்டுகளுக்கு முன்பே குடும்பமாக சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டோம் என்று தெரிவிக்கிறார் உஷாவின் அத்தை.
"தனுகுக்கு அருகே உள்ள ஒத்தூரில் எங்களின் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். எங்களின் தாத்தா அவருடைய வேலை விஷயமாக பல்வேறு இடங்களுக்கு இடம் மாறிக் கொண்டே இருப்பார். என்னுடைய அப்பா சென்னையில் பணியாற்றினார். நானும் என் அண்ணனும் (உஷாவின் அப்பாவும்) சென்னையில் தான் பிறந்தோம். சிறுவயதில் இருக்கும் போது, எங்கள் உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதோடு சரி. அதன் பின்னர் எங்களுக்கும் ஒத்தூருக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. என் அண்ணன் சென்னையில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்," என்று கூறுகிறார் சாரதா.
தன்னுடைய அண்ணன் மற்றும் உஷாவின் குடும்பத்துடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக குறிப்பிடும் சாரதா, உஷாவும் அவரின் கணவரும் அடைந்திருக்கும் புதிய உயரத்தை கண்டு பெருமை அடைவதாக குறிப்பிட்டார். மேலும் பல உயரங்களை அவர்கள் அடைவார்கள் என்று நம்பிக்கையுடன் பேசினார் சாரதா.
மகிழ்ச்சியடையும் உறவினர்கள்
உஷாவைப் பற்றி குறிப்பிடும் சாரதா, அவர் சிறுவயதில் இருந்தே மிகவும் புத்திசாலியான நபர் என்று குறிப்பிட்டார். மேலும் ஜே.டி.வான்ஸின் இந்த வெற்றிக்கு உஷா முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக பேசுவதில்லை என்றாலும் கூட, உஷாவுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்புவதாக குறிப்பிடுகிறார் சாரதா. ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த சிறிது நேரத்தில் உஷாவுக்கு அலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்ததாக கூறுகிறார் அவர்.
இந்த தேர்தலில் டிரம்பும் ஜே.டி.வான்ஸும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் சாரதா.
உஷாவின் மற்றொரு நெருங்கிய உறவினரான பேராசிரியர் சாந்தம்மா, உஷாவும் வான்ஸும் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டனர் என்று பிபிசியிடம் கூறினார். சாந்தம்மாவின் மைத்துனரின் மகள் தான் உஷா.
வெகுநாட்களுக்கு முன்பாகவே அவர்கள் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதால், அடிக்கடி அவர்களை பார்க்க இயலவில்லை என்று குறிப்பிடுகிறார் சாந்தம்மா. ஆனால் உஷாவின் அப்பாவை சென்னைக்கு சென்ற போதெல்லாம் பார்த்ததாக நினைவு கூறுகிறார் அவர்.
உஷாவின் குடும்பம் இன்று அடைந்திருக்கும் உயரத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினார் சாந்தம்மா.
உஷாவின் திருமணத்திற்காக சாரதா அமெரிக்கா சென்றதையும் குறிப்பிடுகிறார் அவர்
நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வந்த உஷா
சான் டியாகோவில் நடுத்தர குடும்பப் பின்னணியில் வளர்ந்ததாக தன்னுடைய உரையில் குறிப்பிட்டார் உஷா.
அவரின் பெற்றோர்கள் 70களில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தனர். உஷாவும் அவருடைய சகோதரியும் அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்.
சட்ட பள்ளியில் படிக்கும் போது வான்ஸை சந்தித்ததாகவும், அப்போது இருந்தே தனக்கு மிகவும் விருப்பமான நபராக வான்ஸ் இருப்பதாக தெரிவித்தார் அவர்.
நியூயார்க் டைம்ஸ் செய்திப்படி இவ்விருவரும் 2013ம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் "வெள்ளை அமெரிக்காவில் சமூக வீழ்ச்சி" என்ற விவாத நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர்.
அமெரிக்காவில் பிறந்த உஷா, இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். ஜே.டி.வான்ஸ் ஒரு கத்தோலிக்கர் ஆவார்
கணவரோடு ஒப்பிடுகையில் வேறுபட்ட கல்வி மற்றும் வேலை சார்ந்த பின்புலத்தை கொண்டிருக்கிறார் உஷா. யேல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பிறகு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பகால நவீன வரலாற்றில் எம்.பில். பட்டம் பெற்றதாக தெரிவிக்கிறது அவருடைய லிங்க்ட்-இன் பக்கம்.
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜான் ராபர்ட்ஸிடம் ஆரம்பகாலத்தில் எழுத்தராக பணியாற்றினார் உஷா. தற்போது அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
தன்னுடைய மனைவியை அடிக்கடி புகழும் ஜே.டி.வான்ஸ் உஷாவை ஆத்ம வழிகாட்டி என்று அழைக்கிறார்.
சி.என்.என் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஜே.டி.வான்ஸ் ஒருமுறை உஷாவைப் பற்றி "எனக்கு என்னவென்றே தெரியாத கேள்விகளுக்கு கூட பதில் அறிந்து வைத்திருக்கிறார்," என்று எழுதியுள்ளார்.
தனக்கு தெரியாத பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் தன்னுடைய மனைவிதான் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ்.
அவருடைய புத்திசாலித்தனம் பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆயிரம் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைக் கூட சில மணி நேரங்களில் வாசித்துவிடுவார் என்று தன்னுடைய மனைவிக்கு புகழாரம் சூட்டுகிறார் ஜே.டி.வான்ஸ்.
தைரியம் தந்து என்னை வழிகாட்டும் ஒரு பெண் உஷா என்று கூறும் ஜே.டி.வான்ஸ், நிறைய யோசித்துக் கொண்டிருக்கும் போது நிஜ உலகிற்கு அழைத்து வருவது உஷாதான் என்று 2020ம் ஆண்டு மெகைன் கெல்லியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.
"என்னைப் பற்றி நான் பெருமையாகவும் தலைக்கனத்துடன் இருக்கும் போதும், என்னுடைய மனைவி என்னைவிட அதிகம் சாதித்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்," என்றும் ஜே.டி.வான்ஸ் கூறியிருக்கிறார்.