நடிகை கீர்த்தனா மீண்டும் நடிக்கும் 'பேபி & பேபி'
'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகையாக அறிமுகமான கீர்த்தனா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ' பேபி & பேபி' எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேபி & பேபி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய், யோகி பாபு, கீர்த்தனா, பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, சிங்கம் புலி, நிழல்கள் ரவி, ஆர் ஜே விக்னேஷ் காந்த், தங்கதுரை, ராமர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி. பி. சாரதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜி பி எஸ் கிரியேசன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. பி. செல்வகுமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. யுவராஜ் வழங்குகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆறு வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் குடும்பத்துடன் கொண்டாடி ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
சின்னத்திரையில் வெற்றி பெற்ற தொடராக ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' எனும் தொடரில் ஜனனியின் அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தனா சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெள்ளி திரைக்கு திரும்பி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாகவும், ஜெய்க்கு அம்மாவாகவும் அவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் தமிழில் நாயகனுக்கு அம்மாவாக நடிப்பதற்கு புதிய திறமை வாய்ந்த நடிகை ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதால் ரசிகர்களும், திரை உலகினரும் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்.