ஜூலை, ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.