
ஹிட்லருக்கும் அனுரவுக்கும் வேறுபாடு இல்லை!
கடும் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தாய் நாடு பாசிசவாதத்துக்கு இரையாவதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளின் தற்காலின ஒன்றிணைவு நிலையானதாக வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அதற்கு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். |
சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சூழலிலேயே ஐ.தே.க.வின் சம்மேளனம் இடம்பெறுகிறது. இலங்கையானது தொடர்ந்தும் ஜனநாயக நாடாகவே இருக்குமா அல்லது பாசிசவாதத்துக்கு இரையாகுமா என்ற அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பாசிசவாதிகள் ஆயுதங்களுடன் ஆட்சியைக் கைப்பற்ற வரும் போது அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எமக்குத் தெரியும். இவர்களை எதிர்கொள்வதற்கு எமது இராணுவத்துக்கு சுயாதீனமான உரிமையுள்ளது. ஆனால் தற்போது தேசாபிமானிகள் என்ற போர்வையில் மக்கள் ஆணையுடன் பாசிசவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றமை எமக்கு புதிய அனுபவமாகும். ஹிட்லர் ஜேர்மனில் அதிகாரத்தைக் கைப்பற்றியமைக்கும், தற்போது ஜே.வி.பி. ஆட்சியமைத்துள்ளமைக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. நேற்று நாமலுக்கு நடக்கவிருந்தது, அண்மையில் ரணிலுக்கு நடந்தது நாளை எமக்கும் நடக்கலாம். இந்த பாசிசவாதிகள் இன்னும் என் பக்கம் திரும்பவில்லை என்று ஒவ்வொருவரும் அமைதியாக இருந்தால் அது பாரிய ஆபத்தாகும். வரலாற்றில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். கொள்கைகளிலும் பாரிய மாற்றங்கள் இருக்கலாம். அவற்றில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அதற்கு இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கும் முதலாவதாக வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தொழிற்சங்கங்கத்தினை அச்சுறுத்துப் போதும், கட்சி செயலாளர்கள் நாம் ஆட்சியைக் கைப்பற்றியது மீள கொடுப்பதற்கு அல்ல என்று கூறும் போதும், உயிர் தியாகம் செய்தாவது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்று நகர மேயர்கள் கூறும் போது ஹட்லர் நினைவுக்கு வருகிறார். அநுர திஸாநாயக்க, ஹிட்லரின் மறு உருவமா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் அந்த முயற்சி இப்போது வெற்றியளித்துள்ளது. ரணில் கைது செய்யப்பட்டமை நாம் விரும்பாத ஒரு சம்பவம் என்ற போதிலும், அந்த சம்பவம் நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகள் இடம்பெற வழிவகுத்துள்ளது. அன்று உருவாகிய தற்காலிக ஒற்றுமையை நிலையானதாக வேண்டும். அந்த ஒற்றுமையை இந்த பாசிசவாதத்தை தோற்கடிக்கும் வரை பேணிச் செல்ல வேண்டியது இன்று எம் கைகளிலுள்ள சவாலாகும். அதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வகிக்க வேண்டும். அவரால் மாத்திரமே அது முடியும் என்று நாம் நம்புகின்றோம். என்றார். |