நாகர்கோவிலில் இன்று பிரம்மாண்ட அரசு விழா!
|
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இன்று 2வது நாளாக நாகர்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கிறார். நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. |
|
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கல்லடிவிளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நவீன தமிழகத்தை உருவாக்கிய கருணாநிதியின் சாதனைகளை போற்றும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று பிரம்மாண்ட விழா இதனிடையே இன்று பிப்ரவரி 25ம் தேதி காலை நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.. இந்த விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். மேலும் நாகர்கோவில் அநாதைமடம் மைதானத்தில் அமையவுள்ள புதிய ஐடி பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.. பணிகள் நிறைவடைந்த மற்ற அரசுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு நாளை காலை 10.30 மணியளவில் அவர் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வழியாக விமானத்தில் சென்னை திரும்புகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல்வரின் இந்த வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்; இந்த தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. |