3-வது அலையை தடுக்க தமிழக அரசு தீவிரம்

18.07.2021 15:43:03

ஊரடங்கு தளர்வு காரணமாக கடை வீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டன.

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால்   ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 10-வது முறையாக நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வு காரணமாக கடை வீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டன.

இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் மளிகை கடைக்காரர்கள், டீ கடைக்காரர்கள், வியாபாரிகள் பலர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முகக்கவசம் அணியும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எந்தெந்த கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறதோ அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

வணிக பகுதிகளை கண்காணிக்க போலீசாரும், அதிகாரிகள் குழுவினரும் அவ்வப்போது ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதால், அதை முன்கூட்டியே சமாளிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகம் உள்பட 6 மாநில முதல் மந்திரிகளுடன் நேற்று முன்தினம் காணொலியில் பேசினார்.

அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களையும் தொடர்புகொண்டு தலைமை செயலாளர் காணொலியில் பேசினார். கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று விரிவாக கேட்டறிந்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் கேட்டறியப்பட்டன.

பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா மீண்டும் அதிகம் பரவுவதால் தமிழகத்தில் என்னென்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.