சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் களைகட்டிய வெசாக் பண்டிகை!

23.05.2024 07:44:13

புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று பௌத்த மக்கள் வெசாக் பௌர்ணமி பண்டிகை தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பொருளாதார சிக்கல்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், பொது மக்கள் வெசாக் பண்டிகையை வரவேற்கும் வகையில், வெசாக் கூடுகளை வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களில் காட்சி படுத்தியுள்ளனர்.

அத்தோடு, நாட்டின் பல பகுதிகளிலும் வெசாக் அலங்கார விளக்குத் தோரணங்களும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் தானசாலைகளும் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய வெசாக் தின நிகழ்வுகள், மாத்தளை நகரில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த நகரமே அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும், மாத்தளை நகரில் மதுபான சாலைகள் நேற்றுமுன்தினம் முதல் நாளை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளில் இன்றும் நாளையும் மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வெசாக் பண்டிகையினை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.