விஜய்க்கு குட் நியூஸ் சொன்ன மலேசிய பிரதமர்!
|
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது நெருங்கிய நண்பரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டசபைத் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து மலேசியப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. |
|
தமிழக முதலமைச்சர் விஜயுடனான உரையாடல் குறித்து பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதிவிட்டதாவது: "இன்று எனது நண்பரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யிடம் தொலைபேசியில் பேசி மகிழ்ந்தேன். தமிழக மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்த மிகப் பெரிய பொறுப்பிற்கு எனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டேன். தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், மாநிலத்தின் மிகச் சிறந்த எதிர்காலத்திற்காகவும் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தவும், வழிநடத்தவும் எனது நண்பர் முதல்வர் விஜய்க்குத் தேவையான வலிமையும், ஞானமும் (Strength and Wisdom) தொடர்ந்து கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடலின் போது மற்றுமொரு முக்கியத் தகவலையும் அன்வர் இப்ராஹிம் பகிர்ந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசவிருக்கும் மலேசியப் பிரதமர், "வாய்ப்பு அமைந்தால், அதே பயணத்தின் போது தமிழகத்திற்கு ஒரு சிறிய அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்வேன்" என்றும் முதல்வர் விஜயிடம் தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமரின் நெகிழ்ச்சிப் பின்னணி கடந்த இரண்டு வாரங்களில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், விஜய்யின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவிப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தின் பாடலையும், அவரது திரையுலகப் பயணத்தையும் மேற்கோள் காட்டிப் பாராட்டியிருந்தார். சினிமாவைக் கடந்த பொறுப்பு: "பல ஆண்டுகளாக அவரது தீவிர ரசிகர்கள், அவர் ஊழல் அரசியல்வாதிகளையும் வில்லன்களையும் திரையில் மூன்று மணி நேரத்திற்குள் (இடைவேளைக்கு முன்பும் பின்பும்) வீழ்த்துவதைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தமிழக மக்கள், திரையில் நடித்த கதாபாத்திரங்களை விடப் பல மடங்கு பெரிய பொறுப்பை நிஜ வாழ்க்கையில் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்" என்று அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார். மலேசியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடன் கொண்டுள்ள இந்தத் தனிப்பட்ட நட்பு மற்றும் நெருக்கம் இரு நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டுத் தொடர்பை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியாவில் சுமார் 2 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) வசித்து வருகின்றனர். இதுதவிர, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) சுமார் 27.5 லட்சம் (2.75 Million) பேர் மலேசியாவில் வாழ்கின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.8 சதவீதம் ஆகும். இதன் மூலம் உலக அளவில் அதிக இந்தியர்கள் வாழும் 3-வது நாடாக மலேசியா திகழ்கிறது. மிக முக்கியமாக, மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினரில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்களின் இந்த வலுவான பின்னணியே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையும், புதிய முதலமைச்சர் விஜயின் பொறுப்பேற்பையும் மலேசியப் பிரதமர் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, தொடர்ந்து வாழ்த்து மழை பொழிவதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மலேசியாவும் தமிழகமும் - நூற்றாண்டுகள் கடந்த பந்தம் மலேசியாவும் தமிழகமும் தலைமுறை தலைமுறையாக ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளைக் கொண்டுள்ளன. மலேசியாவில் உள்ள தமிழர் சமூகம் அந்நாட்டின் பன்முக கலாச்சார அமைப்பில் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது என்று அன்வர் சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டு டிசம்பரில் கோலாலம்பூரில் நடைபெற்ற 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டில் 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விஜய் பேசும்போது, "இலங்கைக்கு அடுத்தாற்போல் இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகம் மலேசியாவில் தான் உள்ளது. மலேசியா தமிழர்களுக்கு மிகவும் சிறப்பானது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |