ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியைப் பார்க்கவே முடியாது-ரஜினிகாந்த் புகழாரம்
நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பது, முதியோர்களுக்கு அன்னதானம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியுள்ளார்.
"ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாபோல இன்னொரு பெண்மணியைப் பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை, எம்.ஜி.ஆருக்கு புரட்சித்தலைவர் என்கிற பட்டம் வந்தது. நடிகராக இருந்து ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக ஆனார். அவர் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது அந்தக் கட்சியிலேயே மிக மிக அனுபவம் உள்ள தலைவர்கள் பலர் இருந்தும் ஒரு பெண் தனியாகப் பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி அதை இன்னும் பெரிய கட்சியாக மாற்றினார்.
இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும் அவரை மதித்தார்கள். அவருடைய திறமையைப் பார்த்துப் பிரமித்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து நான் பேசும் சூழல் ஏற்பட்டது.
எனக்கும் அவருக்கும் ஒரு மனஸ்தாபம் வந்தது. பிறகு என்னுடைய மகள் கல்யாணத்திற்கு அழைக்கப்போனபோது அதையெல்லாம் மறந்து கல்யாணத்திற்கு வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தார். கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா" என்று பேசினார்.