தற்கொலை படை தாக்குதல் முறியடிப்பு

30.08.2021 05:50:07

காபூல் விமான நிலையத்தை நோக்கி வாகனத்தில் வந்த தற்கொலைப் படையினர், அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையம் அருகே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக குண்டுகள் வீசி கொன்றதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் மீது, நேற்று குண்டு வீசப்பட்டது. இதில், ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விமான நிலையத்தை நோக்கி தற்கொலை படை பயங்கரவாதிகள் வாகனத்தில் வந்தபோது, ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளன. முதலில் வந்த தகவலின்படி, இந்த இரண்டு சம்பவங்களும் தனித்தனியாக நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியபோது, அதில் ஒரு குண்டு தவறுதலாக வீட்டின் மீது விழுந்ததாக, பின் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. நாளைக்குள் முழுமையாக அமெரிக்க படைகள் விலக உள்ளதால், காபூலில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.