பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தால்.. சீமானுக்கு ராஜ்கிரண் கண்டனம்
சீமான் தலைமையில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை வகித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது" என காட்டமாக விமர்சித்திருந்தார். சீமான் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீமானின் இந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ராஜ் கிரண் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல... ராஜ்கிரண் பதிவு "இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.