பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை .

20.07.2023 18:25:07

பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை

இந்த மென்பொருள் கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். கட்டுரைகளை உருவாக்குவதில் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது. இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும். ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.