நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தசரா படம் வெளியானது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகையர் திலகம் படத்தில் நடித்த சாவித்திரி கதாபாத்திரம் மற்றும் தசரா படத்தில் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு திருப்தியை கொடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "இரண்டு கதாபாத்திரங்களுமே எனக்கு முக்கியமானவை. நடிகையர் திலகம் வாழ்க்கை கதை என்பதால் அதற்கான பயிற்சி எடுத்து நடித்தேன். அது சவாலாகவும் இருந்தது. தசரா படத்தில் கிராமிய பெண்ணாக வந்தேன். எனது சினிமா வாழ்க்கையில் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முக்கியமானவை'' என்றார். இன்னொரு ரசிகர் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்களாமே திருமணம் எப்போது என்று கேட்டார். அதற்கு "நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். அதை முன்னதாகவே எல்லோருக்கும் தெரிவிப்பேன்'' என்றார். ஆனாலும் கீர்த்தி சுரேஷ் ரகசியமாக ஒருவரை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.